Senthamizhan Maniarasan 18 November 2013 இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்! ம.செந்தமிழன்

இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்!
ம.செந்தமிழன்

அலோபதியின் அறிவியல் மிக வினோதமானது. நோய்வாய்ப்பட்ட மக்களிடம் அம்முறை ஒரே ஒரு கேள்வியைத்தான் மறைமுகமாகக் கேட்கிறது. ‘நீ தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறாயா அல்லது கொலை செய்யப்பட விரும்புகிறாயா?’ என்பதே அக்கேள்வி.

’நாங்கள் வாழவே விரும்புகிறோம்’ என மக்கள் கதறினால், ‘உனக்கு வந்த நோயிலிருந்து மீண்டு உன்னால் வாழவே முடியாது. ஒன்று நோயுடன் கிடந்து நீயே செத்துப் போ. அல்லது எனது மருந்துகளால் நான் உன்னைக் கொலை செய்கிறேன்’ என்பதே அதன் மறைமுகமான பதில். எல்லா அலோபதி மருந்துகளுமே எதிர்விளைவு கொண்டவைதான். அதாவது, எந்த நோய்க்காக மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த நோயையும் குணப்படுத்தாமல், சம்பந்தமே இல்லாத வேறு பல நோய்களையும் உருவாக்குபவைதான் அலோபதி மருந்துகள்.

சர்க்கரை நோய் அலோபதியின் வணிகச் சந்தையை மிக விரிவானதாக மாற்றிவிட்டிருக்கிறது. பல ஆயிரம் கோடிகள் இந்தச் சந்தையில் புழங்குகின்றன. மரபுவழி மருத்துவ முறைகளால், சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்று நாம் கூறினால், தமது சந்தைக்குப் பெரும் ஆபத்து வந்து சேரும் என்ற பதட்டம் அவர்களில் சிலரை ஆட்கொள்கின்றது.
இப்போதும் சில அலோபதி மருத்துவர்கள், அவரவர் இணையப் பக்கங்களில், என்னை ‘சமூக விரோதி’ என்றே குறிப்பிட்டு எழுதிக் கொண்டுள்ளனர். ஒரு மருத்துவர் ஒருபடி மேலே சென்று தமது இயலாமையையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்திவிட்டார்.

’அலோபதிக்கு எதிராக எழுதப்படும் கட்டுரைகளுக்கு விருப்பம் தெரிவிக்கும் (like) நபர்களை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நபர்கள் எங்களிடம் மருத்துவத்துக்கு வரும்போது ‘கவனித்து’ அனுப்புவோம்’ என்று எழுதியுள்ளார் அந்த ‘மருத்துவர்’.

ஒருவேளை விஷ ஊசி போட்டுக் கொன்றுவிடுவாரோ!
சரி, அப்படியே கொலை செய்தாலும் நாம் அவர்கள் மீது வழக்கு கூட தொடுக்க இயலாது. நாம்தான் அவர்கள் நீட்டும் படிவங்களில் எல்லாம் என்ன இருக்கிறது எனக் கூடப் படிக்காமல் கையொப்பம் இட்டுத்தருகிறோமே.

ஆனால், உண்மையின் வலிமைக்கு முன், உலகின் எந்தச் சக்தியும் நிற்கவும் நிலைக்கவும் முடியாது. எந்த ஊசி போட்டும் உண்மையின் குரலை ஒடுக்கிவிட முடியாது. உலகில் உண்மை பேசுவோர், அறிவையும், ஆயுதங்களையும் நம்பி அல்ல, மனசாட்சியையும் இயற்கையின் பேராற்றலின் ஆசியையும் நம்பிப் பேசுகின்றனர். ஆகவே, இந்த மிரட்டல்கள் பரிதாபத்துகுரியவையே தவிர, பயப்படத் தகுந்தவை அல்ல.

உண்மை பேசுவோர் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அலோபதித்துறை எண்ணற்ற நல் மனதுக்காரர்களைக் கொண்ட துறைதான். அவர்களில் இருவரை உங்களுக்கு அறிமுக செய்ய விழைகிறேன்.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரு அலோபதி மருத்துவர்கள் அவர்கள். ஒருவர், என்ரிகோ பொர்டியூஸ், MPH உதவி ஆய்வாளர். மற்றவர், பேராசிரியர். ட்ரிவர் ஆர்சர்ட், MD. இருவரும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறையைச் சேர்ந்தவர்கள். இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகளின் ஆயுட்காலம் பற்றிய விரிவான ஆய்வு ஒன்றினை இவர்கள் மேற்கொண்டனர்.

இன்சுலின் சிகிச்சை அறிமுகமான 1920களில் என்ன விதமான மாற்றங்கள் நடந்தன என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள். ’இன்சுலின் சார்ந்த சர்க்கரைநோயின் மரணங்கள்’ என்பது அவர்களது ஆய்வுநூலின் மையக் கருத்து. ஆய்வின் தொகுப்புரையை அவர்கள் பின்வருமாறு தொடங்கியுள்ளனர்:

’1920களில் இன்சுலின் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் மரணம் அடையும் விதத்தில் அதிர்ச்சியளிக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இன்சுலினுக்கு முன்பு, சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்குச் சென்று மரணமடைந்தனர். இன்சுலிக்குப் பின்னர், அதைப் பயன்படுத்திய மக்கள், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் இதய நோய் ஏற்பட்டு மரணமடைவது அதிகரித்துவிட்டது.

இன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குழந்தைப் பருவ இன்சுலின் நோயாளிகளைப் பொறுத்தவரை, தற்போது இன்சுலின் பயன்படுத்துவோரில் 15 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் அவர்களது 40வது வயதிலேயே மரணமடைவார்கள். அந்த நேரத்தில், நாட்டின் இறப்பு விகிதம் இப்போது உள்ளதைக்காட்டிலும் 20 மடங்குகள் அதிகமாக இருக்கும்’
மிக நீண்ட ஆய்வறிக்கையின் தொகுப்புரை (summery) இவ்வாறு துவங்கிறது.

தொடர் இன்சுலின் பயன்பாடு மனித உடலைச் சீரழிக்கும் என்பதை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் அரசு சுகாதாரத் துறைகளே வெளிப்படையாக அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மேற்கண்ட ஆய்வறிக்கையைக்கூட அமெரிக்காவின் ’அமெரிக்க உடல் நல மற்றும் மனிதச் சேவைத் துறை’தான் வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இன்சுலின் குத்திக்கொள்ளும் நம் சமூகத்தவர் சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளாகி, டயாலிசிஸ் எனும் செயற்கை இரத்தச் சுத்திகரிப்புக்கு ஆட்பட்டு, சில காலத்தில் மரணமடைவதை நாம் நேரடியாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

மரணமடையாத மக்கள் கூட, விரும்பிய இடங்களுக்குப் போக இயலாமல் விரும்பிய உணவுகளைக்கூட உண்ண இயலாமல் நடைபிணங்களாக அலைவதையும் பார்க்கிறோம்தானே. இவை எல்லாம், சர்க்கரை நோயால் வந்தவையா? அல்லது அந்த நோய்க்கு வழங்கப்பட்ட இன்சுலினால் வந்தவையா என இந்த நாட்டின் 120 கோடி மக்களில் எவருமே கேட்கக் கூடாதா?
அப்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை எந்த அலோபதி மருத்துவராவது நேர்மையாக பதில் கூறியுள்ளாரா?

இந்த இன்சுலின் சர்க்கரை நோயை குணப்படுத்தவும் இல்லை; நோயாளியின் உயிருக்கு உத்தரவாதம் தரவும் இல்லை. மாறாக, அந்த நோயாளி சற்றும் எதிபாராத பல உயிர் ஆபத்து நோய்களை உருவாக்குகிறது. பின்னர் எதற்கு இப்படி ஒரு ‘சிகிச்சை’ என்று மக்கள் கேட்க வேண்டும்.

மாடுகளைத் தார்க்குச்சியால் குத்தினால் கூட, குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விலங்கு நல வாரியம் இருக்கிறது. மனிதர்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மரணங்களைக் கேட்கத்தான் முறையான சட்ட அமைப்புகள் இல்லை.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ள வேறு சில தகவல்களையும் பார்ப்போம்.

’ஆயுள் காப்பீடு செய்துகொண்ட மக்களின் மரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவு இது. 1935-63 ஆண்டுகாலத்தில், இன்சுலின் எடுத்துக் கொண்ட 30 வயதுக்குக் குறைவான மக்களின் மரண எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதைக்காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக இருந்தது’

ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளும்போது,காப்பீட்டு நிறுவனங்களுக்கு மக்களின் ஆயுள்காலம் குறித்த ஒரு கணக்கு இருக்கும் அல்லவா, அந்தக் கணக்கைக் காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக மரணங்கள் இன்சுலின் நோயாளிகளுக்கு ஏற்பட்டது.

‘இந்த மரணங்கள் அனைத்திலும், இதய நோய், கழுத்துப்பட்டை நரம்பு நோய்கள் மிக அதிகளவில் இருந்தன. ஜோஸ்லின் க்ளினிக் மற்றும் வேறு சில குழுக்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அமெரிக்க மக்கள் தொகையில் ஏற்படும் பொதுவான மரண எண்ணிக்கைக்கும் இன்சுலின் நோயாளிகளின் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததைக் காட்டுகிறது. 1931-59 காலத்தில் ஜோஸ்லின் க்ளினிக் நோயாளிகளின் மரண ஒப்பீட்டு ஆய்வு மசாசூசெட்ஸில் இருந்த பொதுமக்களின் வயது, பாலினம் (ஆண்/பெண்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

அதாவது, இந்த க்ளினிக்கில் இருந்த இன்சுலின் நோயாளிகள் மற்றும் மசாசூசெட்ஸ் நகரின் மக்கள் தொகையில் ஏற்பட்ட மரணங்கள் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு நடத்தப்பட்டது இந்த ஆய்வு.

சர்க்கரை நோயாளிகளின் மரணம் எல்லா வயதுகளிலும் அதிகமாகவே காணப்பட்டது. 0-9 வயதில் இருந்த ஆண் குழந்தைகளில் மட்டும் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆண்களைப் பொறுத்தவரை, எதிர்பார்க்கப்பட்ட மரண விகிதத்தைவிட, 3.75 மடங்குகள் அதிகமானோர் இறந்துபோனார்கள்.’

அதாவது ’10 பேர் இறந்துபோவார்கள் எனக் கணக்கிட்டால், ஏறத்தாழ 38 பேர் இறந்தார்கள்’ என்கின்றனர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்களான என்ரிகோ பொர்டியூஸ் மற்றும் ட்ரிவர் ஆர்சர்ட் ஆகியோர்.

சர்க்கரை நோய் என்ற காரணத்திற்காக அலோபதி மருத்துவரை அணுகும் மக்களுக்கு, இரண்டு வழிகள் காட்டப்படுகின்றன. ஒன்று, அலோபதி மருந்துகளை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தொழிய வேண்டும். அல்லது, நோயினால் செத்தொழிய வேண்டும். ஆகக் கடைசியில், அவர் நோயைக் குணப்படுத்தும் இல்லை, எதிர்விளைவே இல்லாத மருந்துகளையும் பரிந்துரைப்பதும் இல்லை.

சர்க்கரை நோயை ‘அமைதியான கொலைகாரன் (silent killer)’ என்கிறது அலோபதி மருத்துவம். உண்மையில் ‘அமைதியாக கொலை’ செய்வது சர்க்கரை நோயா? அலோபதி மருந்துகளா? என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் போனால், நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையை நாம் வீணடிக்கிறோம் எனப் பொருள்.

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்