செந்தமிழன் பதிவு

நம்மாழ்வார் முன்னிலையில் உறுதிமொழிகள்!

நம்மாழ்வார் ஐயா உருவாக்கிய வானகம் வாழ்வியல் பண்ணையில் நேற்று ஐயாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஐயாவின் உடல் முன்பு, பல்லாயிரம் மக்கள் ஏற்ற உறுதிமொழிகள் இவை.

உறுதி மொழிகள்

இயற்கையின் உண்மையான பிள்ளையாக, தமிழர்களின் வழிகாட்டியாக, வேளாண்மையின் ஒளிவிளக்காக வாழ்ந்து மறைந்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் பேரால் இந்த உறுதிமொழிகளை ஏற்கிறோம்.
1. நஞ்சுகளே இல்லாத வேளாண்மை முறையை, இயற்கை வழி வேளாண் முறையை வாழ்க்கையாக்குவோம்.

2. இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. இயற்கையின் அங்கமான மனித உடலும் தவறு செய்யாது. ஆகவே, இயற்கை வழி வாழ்வியலின் மூலம் மருந்தே இல்லாத மருத்துவ முறைகளைக் கடைப்பிடிப்போம். மருந்தில்லா மருத்துவமுறையை வாழ்க்கையாக்குவோம்.

3. இயற்கை வளங்களையும் மனித ஆற்றலையும் சுரண்டுவதற்காகத்தான் இன்றைய கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் தமக்குள் இருக்கும் சுய தன்மையை உணருவதே உண்மையான கல்வி. “தொட்டனைத் தூறும் மணற்கேணி” என்பதுபோல தமக்குள் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கே, அறிவு ஊற்றெடுக்கிறது. இதுவே இயற்கை நியதி. சுய ஆற்றலை மேம்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவோம், கடைபிடிப்போம்.

4. இயற்கை எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இயற்கை எல்லா உயிர்களின் தாய். மனித குலம் தம் அறிவைக் கொண்டு இயற்கையைச் சுரண்டி, கொள்ளையடிக்கிறது. பெரும் நிறுவனங்களின் வணிகத்திற்காகவும் சில முதலாளிகளின் இலாபத்துக்காகவும் இயற்கை அன்னை துன்புறுத்தப்படுகிறாள்.
இயற்கை வளங்களைச் சூறையாடும் எந்தத் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளை இயற்கை வழியில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

இயற்கையின் உண்மையான பிள்ளைகளாக நாம் வாழ வேண்டுமெனில் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடித்தான் தீர வேண்டும்.


முழக்கங்கள்

1. இராசயனமே இல்லாத இயற்கை வழி வேளாண் முறைகளைக் கடைபிடிப்போம்.
2. மருந்தே இல்லாத மருத்துவ முறைகளை வாழ்க்கையாக்குவோம்.
3. சுய ஆற்றலை மேம்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவோம்.
4. இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் கடமை. இதற்காகப் போராடுவது நமக்கு இயற்கை வழங்கிய உரிமை. போராடுவோம் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்.

வானகம் ஒருங்கிணைப்பாளர் திரு. லெ.ஏங்கெல்ஸ் ராஜா முன்மொழிந்த பணித் திட்டம்:

ஐயா நம்மாழ்வாரின் நான்கு விருப்பங்களில் இயற்கை வழி வேளாண்மை, மருந்தில்லா மருத்துவம், இயற்கை வளங்களைக் காப்பதற்காகப் போராடுதல் ஆகிய மூன்று விருப்பங்கள் நிறைவேறத் தொடங்கிவிட்டன. இந்த மூன்று விருப்பங்களையும் பேசியதோடு நில்லாமல், அவர் கடைப்பிடித்தார். சமூகத்திலும் இந்த விருப்பங்கள் நல்ல முறையில் வளர்ச்சியடைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சுய ஆற்றலை மேம்படுத்தும் கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஒரு விருப்பம் இன்றைய நிலையிலும் செயல்வடிவம் பெறாமல் உள்ளது.

ஐயாவின் மறைவுக்குப் பின்னர் இந்தப் பணியை நமது முதல் பணியாக மேற்கொள்ள வேண்டியது நம் கடமை.

ஐயா வலியுறுத்திய புதிய கல்விமுறைக்கு ’நம்மாழ்வார் கல்வி முறை’ எனப் பெயரிடுவோம். ஐயாவின் பிறந்த நாளாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இந்தக் கல்வி முறைக்கான திட்டப் பணிகளைத் துவங்க இருக்கிறோம். இந்தப் பணிக்கும் ஐயாவின் வழியில் முன்னெடுக்கப்படும் எல்லாப் பணிகளுக்கும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புகளையும் வேண்டுகிறோம்.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013