பர்கர், பீட்ஸா என்று மைதாவும் சீஸையும் குழப்பிய கலவையை நாகரிகம் என்ற பெயரால் நண்பர்கள் நண்பிகளோடு வாரி வளைத்துத் தின்றுவிட்டு இரை தின்ற மலைப்பாம்பாய் செரிக்க முடியாமல் திணறும் வயிறுகளுக்கு... தனியா எனப்படும் கொத்துமல்லி விதையைக் கொஞ்சம் எடுத்து [1 டேபிள்ஸ்பூன்] வெந்நீரில் ஊற வைத்து, அதனுடன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி அதில் கொஞ்சம் தேன், ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால் செரிமானம் ஆகிவிடும். பரீட்சைக்குப் படிச்சுப் படிச்சு கண்ணைச் சுத்தி ஒரே கருவளையம். அதற்கு வைத்தியம், விளக்கெண்ணெய் 10 சொட்டு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 10 சொட்டு, கொஞ்சம் பன்னீர் சேர்த்துக் குழைத்துக் கண்ணைச் சுற்றித் தடவலாம். பன்னீர் என்றால், ரோசாப்பூ தண்ணீர். தலையிலே நீர் கோத்துக்கொண்டால், தலைபாரம், கண்ணிலே மூக்கிலே நீராகக் கொட்டிக்கொண்டு, தும்மல், தொண்டைவலி இதெல்லாம் தொடர்ந்து வரும். ஜலம் என்றால் தண்ணீர்; அதனாலே ஏற்படுகிற உபாதை, தோஷம்; அதுதான் ஜலதோஷம். இவை எல்லாவற்றுக்குமே சுலபமான வைத்தியம் இதுதான். ...