இளம் தலைமுறையினர் ஏன் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்? நீயா நானா அனுபவத்திலிருந்து... ம.செந்தமிழன்

இளம் தலைமுறையினர் ஏன் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்?
நீயா நானா அனுபவத்திலிருந்து...
ம.செந்தமிழன்

நீயா நானா நிகழ்ச்சியில் இளைஞர்களின் அரசியல் சமூக விழிப்புணர்வு குறித்த தலைப்பில் என் பங்கேற்பினைப் பலரும் பாராட்டியும் வாழ்த்தியும் செய்தி அனுப்பிக் கொண்டுள்ளனர். நன்றி.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏறத்தாழ 30 மாணவர்களில் 5 பேர் மட்டுமே, இடஒதுக்கீடு தேவை என்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் மிகப் பெரும்பான்மையர், முற்பட்ட சாதிகளைச் சேராதவர்கள் என்பது வியப்பிலாழ்த்தும் உண்மை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாகக் கை தூக்கியவர்கள் அனைவருமே ‘முற்பட்ட சாதியினர்’ அல்லர். வெகு சிலர் இருந்திருக்கலாம்.

தாழ்த்தப்பட்ட சாதி மாணவர் ஒருவரே கூட, ‘நான் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன்’. என்னைவிட நன்றாகப் படித்த என் நண்பர்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்காதபோது, எனக்கு இடம் கிடைத்தது. இது என்னை வருந்தச் செய்கிறது’ என்றார்.

இம்மாணவர்கள், அரசியல் அறிவு இல்லாமல் இவ்வாறு பேசுகின்றனர் என்று நான் நினைக்கவில்லை. மாறாக, அவர்களின் உரையில் நான் கற்றுக் கொள்ள நிறைய சேதிகள் உள்ளன என ஆழமாக எண்ணினேன். அவர்கள் பேசியவற்றிலிருந்து எனக்கு ஒரு முக்கியமான சேதி கிடைத்தது.

’’இந்த மண்ணின் குடிமக்களுக்கு, கல்வியும் வேலை வாய்ப்பும் உரிமைகள் என்ற அடிப்படையில் வழங்கப்படாமல், சலுகைகள் என்றளவில் தூக்கி வீசப்படுகின்றன. அவ்வாறு வீசப்படும் சலுகைகளை வாரி எடுப்பதற்கான போட்டியில், எம் மக்கள் தமக்குள்ளேயே மோதிக் கொள்கின்றனர். ஆனால், இப்போட்டியைத் திட்டமிட்டு உருவாக்கும் அரசையும் அரசியலையும் நோக்கி அவர்கள் கோபம் திரும்புவதே இல்லை.

இன்றைய இட ஒதுக்கீட்டு முறை இந்நிலையை உருவாக்கி உள்ளது’
நீயா நானா நிகழ்ச்சியில் மாணவர்கள், இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறியதைக் காட்டிலும், ‘மற்ற சாதிகளுக்கும் கொடுங்கள். ஆனால், எங்களிடமிருந்து பிடுங்கிக் கொடுக்காதீர்கள்’ என்ற நிலையையே வலியுறுத்தினார்.

இதேநிலைப்பாட்டில்தான், அருந்ததியர்களுக்கு ஒதுக்கீடு எனும் முறையை விமர்சிக்க, தலித் அமைப்புகள் சில முன்னெடுத்தன. இதே நிலைப்பாட்டைத்தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சலுகைகளுக்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்புகள் முன்னெடுக்கின்றன. இதே கருத்தை வைத்துத்தான், முற்பட்ட சாதிகள் பிற அனைத்துச் சாதிகள் பெறும் சலுகைகளையும் எதிர்க்கின்றன.
ஆக, இங்கு சிக்கல் மக்களிடையே இருப்பதைக் காட்டிலும், இந்த இட ஒதுக்கீடு முறையில் இருக்கிறது என்பது என் கருத்து.

அரசுக் கல்லூரிகள் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கப்படுவதே இல்லை. தனியார் கல்லூரிகளோ, ஊருக்குப் பத்து முளைத்த வண்ணம் உள்ளன. பெரும் மாணவர் கூட்டம், மிகக் குறைந்த அரசுக் கல்லூரிகளின் இடங்களைப் பெறுவதற்கான போட்டியில் குதிக்கிறது. இட ஒதுக்கீடு என்ற பேரில், பல்லாயிரம் மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது இந்தப் போட்டியில்தான்.இதில் சாதி வேறுபாடு கிடையாது. எல்லா தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் இடம் கிடைக்கிறதா என்ன? பகைமையில், அறியாமையில் அவ்வாறான பிம்பம் உருவாக்கப்படுகிறது. உண்மையில், எல்லாச் சாதிகளிலும் தகுதி இருந்தும் இடம் கிடைக்காத மாணவர்கள் எண்ணற்றோர் உள்ளனர்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆண்டுக்கு ஆண்டு அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கையைத் தேவைக்கேற்ப உயர்த்த வேண்டும். மருத்துவம், பொறியியல் போன்ற உயர் தேவைகள் உள்ள துறைகளில் தனியார் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி, தரமான அரசுப் பல்கலைக் கழகங்களை உருவாக்கி வளர்க்க வேண்டும். தகுதியுடைய மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், இந்த ஆண்டு இடம் வழங்க இயலாத மாணவர்களுக்கு அடுத்த ஆண்டாவது இடம் வழங்கும் உறுதியை அளித்து, அதுவரை அவருக்கு கல்வி உதவித் தொகையை (வாழ்வாதாரத்திற்கு உதவும் அளவு) வழங்கிவர வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளைச் செய்தால், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும், கல்வி குறித்த அச்சம் நீங்கும். அச்சம் நீங்கினால், சக மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சியைப் பற்றிய பொறாமையோ, போட்டியோ ஏற்படாதிருக்கலாம்.

ஆனால், இங்கு நிலைமை என்ன?

எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தாலும் பெரிய மாற்றமில்லாத எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்ட கல்லூரிகள்தான் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. ஏன் இடங்களை அதிகரிக்க்கவில்லை என்று எத்தனைப் பெற்றோர், எத்தனை மாணவர்கள் பல்ககலைக்கழகங்களைக் கேள்வி கேட்கின்றனர்? அல்லது எத்தனை சாதி அரசியல் அமைப்புகள் இதற்காகப் போராடுகின்றன?
போராட்டங்கள் எல்லாம், இட ஒதுக்கீட்டில் தம் சாதிக்கான விகிதாச்சாரத்தை அதிகரிப்பது அல்லது குறையாமல் பார்த்துக் கொள்வது என்ற அளவில் உள்ளன. இப்போராட்டங்கள் தேவைதான். ஆனால், பெற வேண்டிய உரிமைகளைப் போதுமான அளவில் பெறாமல், வெறும் சதவீதக் கணக்கை அதிகரிப்பதால் என்ன பலன்?

விளைவாக, ஒரு சாதிக்காரர் மற்ற சாதிக்குப் பகைவராகிறார். உண்மையில், இவர்கள் இருவரும் பகைவர்களே அல்லர். உண்மையான பகைமை, எல்லாச் சாதிகளுக்கும் பொதுவானது. அதை எதிர்க்க இவர்கள் இணைந்துவிடக் கூடாது என்பது அதிகாரவர்க்கத்தின் கவலை. அதற்காக அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பல்வேறு ஆயுதங்களில் ஒன்றுதான், இப்படியான இட ஒதுக்கீடு முறை என்பது என் கருத்து.

சமூகத்தில் மொத்தமே 3 சதவீதம் உள்ள பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து கல்வி, வேலை வாய்ப்புகளைக் கைப்பற்றவே இட ஒதுக்கீடு அவசியப்பட்டது என்பார்கள். வெறும் 3 சதவீதத்தினரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த, 97 சதவீதம் பேர் தமக்குள் முரண்பட்டுக் கொண்டு நிற்பது வேதனையான உண்மையல்லவா!

கல்வி, வேலைவாய்ப்பு – ஆகியவை நமது உரிமைகளே தவிர எவரும் வழங்கும் சலுகைகள் அல்ல என்ற உண்மையை உள்வாங்கினால், இட ஒதுக்கீடு குறித்த பார்வையில் மாற்றம் வரும் என்பது என் எண்ணம்.
முற்பட்ட, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலிடப்பட்ட பிரிவினர் எல்லாருமே இந்த மண்ணின் மைந்தர்களே.

ஒருவர் மீது ஒருவர் பொறாமை பகைமை கொள்வது நாகரிகமற்ற செயல்.

ஒரு பிரிவினர், பல தலைமுறைகளாகப் படித்தவர் என்பதால், அவரது பிள்ளைக்கு, கல்வியில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் தருவது நியாயம் என்ற நிலை இன்றைய இட ஒதுக்கீட்டின் கருத்துகளில் ஒன்று. ஒரு பிரிவினர், நீண்ட காலமாக கல்வி கற்று வருவதால், அவர்கள் பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாக வேண்டும் என்பது என்ன நியாயம்?

அதேபோல், ஒரு பிரிவினர் முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வருகின்றனர் என்றால், அவர்களுக்கு உரிய தேவைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உரிய கல்வி அளிப்பதற்கு என்ன தடை உள்ளது? வேறு ஒருவரது இடத்தைப் பிடுங்கித்தான் இவருக்குத் தர வேண்டும் என்பது எந்தச் சட்டம்?

மேம்போக்காகப் பார்க்கையில், இன்றைய இட ஒதுக்கீட்டு முறை, பிராமணர்களுக்கு எதிரானதாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இம்முறை, தமிழர்களின் அனைத்துச் சாதியினருக்கும் எதிரானதாக மாறிவிட்டது. இணக்கமாக வாழ வேண்டிய மக்கள், பகைமை பூண்டு மோதத் துடிப்போராக மாற்றப்படுகின்றனர்.

சாதியின்பேரால் ஒருவருக்குக் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதுதானே இட ஒதுக்கீட்டின் நோக்கம்?
இன்று சாதியின் பேரால், எல்லாச் சாதிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆகவே, கல்வியை நம் உரிமை எனக் கருதுவோம். போதுமான கல்வியிடங்களை உருவாக்கித் தரும்படி அரசை வலியுறுத்துவோம். அதுவரை, ஓவ்வொரு சாதியினரின் மொத்த எண்ணிக்கை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வரச் செய்யலாம்.

அதாவது, சமூகத்தில் குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் எத்தனை சதவீதமோ அத்தனை சதவீதம் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது. இவ்வாறு செய்தால், 97 சதவீதம் பிராமணர் அல்லாதாருக்குச் சேரும். ஆனால், இம்முறையும் கூட தற்காலிகமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்