Senthamizhan Maniarasan 22 January · Edited முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை ம.செந்தமிழன் (நூலில் இருந்து…)

முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை
ம.செந்தமிழன்

(நூலில் இருந்து…)

புவியில் எல்லா உயிரினங்களும் சுதந்திரமாக வாழ்கின்றன. மனிதர்கள் மட்டும்தான் சிறைப்பட்டுள்ளனர். தம்மைச் சுற்றி எண்ணற்ற வேலிகளை, புதைகுழிகளை, அகழிகளையெல்லாம் அமைத்துக்கொண்டு நடுவே ஒடுங்கிக் கிடக்கின்றனர். உங்கள் வீட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள நாய் கூட உங்களைவிட சுதந்திரமாகவே உள்ளது. நிச்சயமாக அந்த நாய்க்கு மாரடைப்பும், இரத்த அழுத்தமும் வருவதில்லை. அந்த நாய்க்கு பிறந்த நேரம் பார்த்து எவரும் எதிர்காலத்தைப் பற்றிய ஜோதிடக் கணக்குகளைச் சொல்லத்தேவையில்லை. எவர் மீதும் அதற்குச் சந்தேகம் இல்லை, கோபம் இல்லை, பொறாமை இல்லை, அச்சம் இல்லை, கவலை இல்லை.

எந்த ஒரு உயிர் மேலே உள்ள உணர்ச்சிகள் இல்லாமல் இருக்கிறதோ அதுவே விடுதலை அடைந்த உயிர். இன்றைய சமூகத்தில் இரண்டே இரண்டு பிரிவுகள்தான் உள்ளன. ஒன்று, கடனாளிகள் இனம். இன்னொன்று நோயாளிகள் இனம். மனிதர்கள் இந்த இரண்டில் அடங்கிவிட்டார்கள். எவரெல்லாம், நான் இந்த இரண்டும் இல்லாமல் வாழ்கிறேன் எனச் சொல்கிறார்களோ அவர்கள் விடுதலை அடைந்த மனிதர்கள்.
-------
முடக்கு வாதம் வந்தவரை இயேசு தொட்டார், வாதம் நீங்கியது. பார்வையற்றவரைத் தொட்டார், பார்வை கிடைத்தது. செவி கேளாதவரைத் தொட்டார், செவி திறந்தது. அவர்களிடம் இயேசு, ‘நான் உங்களை சுகப்படுத்தினேன்’ என்று கூறவில்லை. ‘உங்கள் நம்பிக்கை உங்களை நலப்படுத்தியது’ என்றார். கர்த்தர் மீதான நம்பிக்கையை அவர் வலியுறுத்தினார். நீங்கள் கிறித்துவத்தைத் தழுவினீர்கள், இயேசுவை மறந்தீர்கள்.

‘இறைவனிடம் சரணடையுங்கள். அவர் உங்களை வாழ வைப்பார்’ என்றார் நபி. நீங்கள் இஸ்லாத்தைத் தழுவினீர்கள், நபியின் மெய்யறிவைப் புறக்கணித்தீர்கள். ’உடலே ஆலயம். உள்ளத்தில் இறையாற்றல் உள்ளது’ என்று சித்தர்கள் அறிவித்தனர். நீங்கள் கோயில் கோயிலாக அலைகிறீர்கள், சித்தர்கள் தந்த மெய்யறிவை மறந்தீர்கள்.

மெய்யறிவைப் புறக்கணித்து, வெறும் புலன் அறிவை நம்பியதன் விளைவாக, மருத்துவமனைகள் உங்கள் ஆலயங்களாகிவிட்டன, மருத்துவர்கள் உங்கள் கடவுளர் ஆகிவிட்டனர்.
----------------

இயற்கைக்கு ஆற்றல் உண்டு, நம்மைக் காட்டிலும் பெரிது, அதுவே பேராற்றல் என்றால் பகுத்தறிவுக்கு ஆத்திரம் வருகிறது. மனிதனைக் காட்டிலும் பெரிய ஆற்றல் என்ன இருக்க முடியும் என அது கொக்கரிக்கிறது.
நீங்கள் மனப்பூர்வமாக, இப்புவியை நேசித்து வாழ விரும்பினால், பகுத்தறிவின் பிடியிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை.

சடங்குகளைக் கண்டிக்க ஒருவர் நாத்திகராக இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. மனிதருக்கு மேலான பேராற்றலை உணர்ந்து வழிபட்டுக் கொண்டே சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்க்கலாம் என்பதற்கு இயேசுவும் சித்தர்களும் சாட்சி. முகமது நபியும் பலவகைகளில் இவ்வாறான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர்தான்.
ஆகவே, நீங்கள் மூட நம்பிக்கைகளை வெறுப்பதற்கும், சடங்குகளை நிராகரிப்பதற்கும் நாத்திகராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை. உண்மையான, மெய்யறிவில் சடங்குகளும், மூட நம்பிக்கைகளும் இருக்காது.

உண்மையாகவே இயற்கையின் பேராற்றலை உணர்வோருக்கு எந்தச் சடங்கும் தேவையில்லை.

---------
மரங்கள் நிறைய வளர்ந்தால், மழை பொழியும் என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் அதற்கும் மேலான உண்மை ஒன்று உள்ளது.

வெப்பக் கோளமாக இருந்த பூமியில், நானூற்றுப் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்தது. அதுவே பூமியின் முதல் மழை. அப்போது பூமியில் மரங்கள் இல்லை. மரங்கள் மட்டுமல்ல, பூமியில் அப்போது எந்த உயிரினமும் இல்லை.

ஆகவே, மரங்களால் மழை பெய்வதில்லை, மரங்கள் உள்ளிட்ட உயிர்கள் வாழ்வதற்காக மழை பெய்கிறது.

பூமியில் உயிர்கள் தோன்ற வேண்டும் என்பது இயற்கையின் பேராற்றலின் விருப்பம். அந்த விருப்பத்திற்காக மழை பெய்தது. அந்த விருப்பத்தினால், உயிர்கள் தோன்றின.
மழை எப்படிப் பெய்கிறது என ஆராய்ச்சி செய்யும் மனிதர்கள் மழையை உருவாக்கிவிட முடியாது. எந்த ஆராய்ச்சியும் செய்யாத மரங்களால் மழையை வரவழைக்க முடியும். எந்த உயிரும் இல்லாத இடத்திலும் மழை பொழிவிக்க பேராற்றலால் முடியும். அந்த இடத்தில் உயிர்களை உருவாக்கவும் பேராற்றலால் முடியும். எனவே, விருப்பத்தில் இருங்கள். உங்களுக்காகவும் மழை பொழியும்!
--------
 — with Karuppa Samy and 21 others.

Comments

Popular posts from this blog

pls stop gm field trial in indian land and we dont want gm foods we are not rats pls save our agriculture from monsanto and big multinational companys

போராட்டம் ஒன்றே தீர்வு

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்