நான் இயற்கையின் பேராற்றலை வழிபடுகிறேன்! ம.செந்தமிழன்

நான் இயற்கையின் பேராற்றலை வழிபடுகிறேன்!
ம.செந்தமிழன்

எங்கோ ஓர் மூலையில் வாழும் சிலந்தியும் நானும் இயற்கையின் பேராற்றலால் ஒரே வலையில் பிணைக்கப்பட்டுள்ளோம். அச்சிலந்தி என்னைக் காக்கிறதா? இல்லை. நான் அச்சிலந்தியைக் காக்கிறேனா? இல்லை. நானும் சிலந்தியும் இயற்கையின் பேராற்றலால் படைக்கப்பட்டோம், காக்கப்படுகிறோம்.

நான் மனிதன் என்பதால், பேரண்டத்தின் அனைத்தையும் அளக்க முற்படுவதோ, அனைத்தின் நலனுக்கும் நான் பொறுப்பு என இறுமாப்பு கொள்வதோ பிழை.

எனக்கான உணவு இயற்கையின் பேராற்றலால் படைக்கப்பட்டுள்ளது, என் உடலில் வாழும் கோடானு கோடி உயிரிகளுக்கான உணவு என் உடலுக்குள்ளேயே பேராற்றலால் படைக்கப்பட்டுள்ளது. நான் எவற்றை உட்கொள்கிறேனோ அவை எனக்கான உணவு மட்டுமல்ல, எனக்குள் வாழும் உயிரிகளுக்குமான உணவு. நாங்கள் சார்ந்து இயைந்து வாழ்கிறோம்.

நான் எனக்கான உணவைப் படைத்துக் கொள்கிறேன் என இறுமாப்பு கொள்ளும்போது, பேராற்றலின் உணர்விலிருந்து விடுபடுகிறேன். பிற உயிரிகளும் நானும் முரண்பாடுகளாகிறோம். நான் அழிக்கத் துவங்குகிறேன். விளைவாக, அழிய நேரிடும்.

என் வாழ்நாள், என் உணர்வுடன் தொடர்புடையது. எதிர்மறை உணர்வுகளில் வாழ்வோர், நோய்களை வரவேற்றுத் துன்புறுகின்றனர். பேராற்றலின் நேர்மறை உணர்வில் வாழ்வோர், விரும்பும் வரை வாழ்கின்றனர்.

மனதின் ஆற்றலே பேராற்றலைத் தொடர்புகொள்ளும் ஊடகம். அறிவின் ஆற்றல் அல்ல. அறிவு செய்முறைகளை விளக்கும். மனம், விருப்பங்களை விளக்கும். பேராற்றல், அவ்விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அறிவாற்றலை வழங்கும்.
மனம், வெறும் கற்பனை ஆற்றல் அல்ல. அதுவே பேராற்றலுடன் உறவு கொள்ளும் ஆற்றல். மனம், உணருமே அன்றி, பேசாது, எழுதாது. ஆகவே அறிவைக்காட்டிலும் மனம் மேலானது. மனதைக் காட்டிலும் பேராற்றல் மேலானது. மனம் பல உயிரிகளுக்கு வழங்கப்பட்டது தற்செயல் அல்ல. அது பேராற்றலின் விதி!
 — with Living Smile Vidya at photographed by, senthamizhan maniarasan.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013