Senthamizhan Maniarasan 13 October 2013 தகவல் அறிவிக்கப்பட்ட இசைவு ஆவணம் (informed consent form)

தகவல் அறிவிக்கப்பட்ட இசைவு ஆவணம் (informed consent form)

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தொழில் சட்டத்தின்படி (Consumer Protection Act and Medical Profession) அறுவை சிகிச்சைக்கு முன்பு, மருத்துவர்கள் / மருத்துவமனைகள் நோயாளிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய சட்ட விதிகள் இவை.
அறுவை சிகிச்சை செய்து கொள்பவரிடமிருந்து மருத்துவர்கள், இசைவு (சம்மதம் / consent) பெற வேண்டியது சட்டத்தின் பார்வையில் மிகமுக்கியமான நடைமுறை ஆகும். இவ்வாறு இசைவு பெறுவதற்கென ஒரு படிவம் நிரப்பப்பட வேண்டும். இதன் பெயர், தகவல் அறிவிக்கப்பட்ட இசைவுப் படிவம். சிகிச்சை முறை குறித்த முழுமையான தகவல்கள் நோயாளிக்கு அறிவிக்கப்பட்டு, அவரது முழு சம்மதம் பெறப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற சட்டப்படி பின்வரும் விவரங்கள் இசைவு ஆவணத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்:
1. இந்தப் படிவங்கள் உள்ளூர் மொழிகளில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழில் இருக்க வேண்டும். சில நேரங்களில், சாட்சிகளை வைத்துக் கொண்டு கையொப்பமிடுவது சிறந்தது.
2. சிகிச்சை நடைபெறப்போகும் முறைமைகளையும் (procedures), இதற்கு முன்னால் இந்த முறையிலான சிகிச்சைகள் செய்தபோது ஏற்பட்ட இடர்பாடுகள் (risks) மற்றும் ஆதாயங்களைப் பற்றி நோயாளியிடம் மிகத் தெளிவாக விளக்க வேண்டும்.

-அதாவது, அறுவை சிகிச்சையின் தொழில்நுட்ப விவரங்கள், இந்த முறையில் ஏற்கனவே செய்த சிகிச்சைகளின்போது மரணமடைந்தோர், உடல் நலக் கேடுகள் அடைந்தோர், மேலும் உடல்நலம் மோசமானோர், நலமடையாமல் போனோர் இன்னபிற இடர்கள் (risks) மற்றும் இச்சிகிச்சை முறையினால் நலமடைந்தோர் பற்றிய விவரங்களை எல்லாம் நோயாளிக்குத் தெரிவிக்க வேண்டும்.
3. மாற்று சிகிச்சை முறை வாய்ப்புகளைப் பற்றியும், சிகிச்சையே பெறாவிட்டால் நிகழும் இடர்கள் மற்றும் ஆதாயங்கள் பற்றியும் நோயாளிக்கு விளக்க வேண்டும்.

- செய்யப்போகும் சிகிச்சை முறையைத் தவிர, வேறு எந்த வகைகளில் எல்லாம் நோயாளியின் நோய்க்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்பதையும், அந்த முறைகளின் தீய மற்றும் நல்ல விளைவுகளைப் பற்றியும் நோயாளிக்கு விளக்க வேண்டும். பின்னர் நோயாளி எந்த முறையில் சிகிச்சை பெறுவது என தாமே முடிவு செய்ய வேண்டும் என்பதற்காக இவ்விதி.
4. நோயாளியும் அவரது உறவினர்களும் தங்கள் சந்தேகங்களை எல்லாம் கேட்டு, தெளிவடைந்து விட்டார்கள் என்பதை ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும்.
5. சிகிச்சை முறைக்குச் சம்மதம் தெரிவித்து நோயாளி அல்லது அவரது பதிலாள் (proxy) கையொப்பமிட வேண்டும்.
6. சிகிச்சை செய்யும் மருத்துவக் குழுவில் அல்லாத வேறு ஒருவர் சாட்சிக் கையொப்பமிட்டு, நோயாளி அல்லது அவரது பதிலாளின் சம்மதத்தினை முறைப்படி உறுதி செய்ய வேண்டும்.
7. சிகிச்சை துவங்கும் முன்பே, இந்த இசைவுப் படிவத்தில் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
8. வெற்று இசைவுப் படிவத்தில் கையொப்பமிட்டால், அது சட்டப்படி செல்லாது. படிவத்தில், சிகிச்சை முறைகள் விளக்கப்பட்டதற்கான சான்றுகள் இருக்க வேண்டும்
இவற்றில் எத்தனை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். தமிழில் படிவம் உள்ள மருத்துவமனைகள் மிகவும் அரிதாக உள்ளன. ‘மனநிறைவுப் படிவம் (satisfactory form) மட்டும் தமிழில் தரும் மருத்துவமனைகளும் உள்ளன.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013