தெய்வம் உணாவே’ -மரபும் உணவும் ம.செந்தமிழன்

’தெய்வம் உணாவே’
-மரபும் உணவும்
ம.செந்தமிழன்

நமது மரபு மற்றும் உணவு குறித்து நான் எழுதியுள்ள நூல், ’தெய்வம் உணாவே’ -மரபும் உணவும்.
அந்த நூலில் இருந்து சில பகுதிகள்:
…………..
காடுகளில் எவ்வளவோ தாவரங்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரே ஒரு தாவரத்தை ‘இது உணவுக்கானது’ என நீங்கள் புதிதாகக் கண்டு பிடியுங்கள். நிறைய அல்ல, ஒன்றே ஒன்றைக் கண்டு பிடித்தால் போதும். அப்படிக் கண்டு பிடிப்பதோடு நில்லாமல், அது எப்படிப்பட்ட உணவு, அதன் மருத்துவ குணம் என்ன, அதைச் சமைக்கும் முறை என்ன எனவும் நீங்கள் கூற வேண்டும். இதை முயற்சித்துப் பார்த்தால், மரபின் அருமை புரியும்!
………
ஒரு கிலோ எள்ளின் விலை நூறு ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரை மாறுபடுவதுண்டு. நாம் சராசரியான ஐம்பது ரூபாயைக் கணக்கிடுவோம். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்க, இரண்டே கால் கிலோ எள் தேவை. இதன் சராசரி விலை, ரூ. 112.50. மணத்திற்காகவும், தரத்திற்காகவும் எள்ளுடன் பனை வெல்லம் சேர்க்கும் வழக்கம் நமது மரபில் கடைப் பிடிக்கப்படுகிறது. மேற்கண்ட அளவுக்கு நூறு கிராம் பனை வெல்லம் சேர்க்கலாம். இதன் மதிப்பு அதிகபட்சம் ரூ. 7.50. ஒரு கிலோ எள் ஆட்டுவதற்கான செக்குக் கூலி ஐந்து ரூபாய். இரண்டே கால் கிலோவுக்கான கூலி, பன்னிரண்டு ரூபாய் எனக் கொள்வோம்.
மொத்தச் செலவு, நூற்று முப்பத்து இரண்டு ரூபாய். இப்போது உங்கள் கையில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைத்துவிட்டது. எண்ணெய் மட்டுமல்ல, ஏறத்தாழ அரை கிலோ எள்ளுப் புண்ணாக்கும் சேர்த்தே கிடைத்திருக்கிறது. எண்ணெயாக வடிந்தது போக மீதம் எல்லாம் புண்ணாக்காகக் கொட்டிக் கிடக்கிறது. ஒரு கிலோ எள்ளுப் புண்ணாக்கினைச் செக்குகளிலேயே இருபது ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறார்கள். அதை அவர்களிடமே விற்றுவிட்டால், அரவைக் கூலி போக உங்கள் கையில் ஐந்து ரூபாய் மீதமாகும். மொத்தச் செலவுக் கணக்கான நூற்று முப்பத்து இரண்டு ரூபாயில் இந்த ஐந்து ரூபாயைக் கழித்தால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய்க்கான அடக்கச் செலவு ரூ. 127 மட்டும்தான்.
இது சாதாரண எண்ணெய் அல்ல. நீங்களே அரைத்து வடித்த முதல் தரமான செக்கு எண்ணெய். இதில் கலப்படம் என்ற சிந்தனைக்கே இடம் இல்லை. இது உங்களது நேரடித் தயாரிப்பு. நீங்கள் வாங்கிக் கொண்டுள்ள எந்த நல்லெண்ணெயும் இப்படியான தரத்தில் இல்லை. ஆனாலும், அந்தக் குப்பைச் சரக்குகளுக்கெல்லாம் நீங்கள் என்ன விலை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனச் சிந்தியுங்கள்.
………
எண்ணெய்களில், ஒரு சூதாட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் நடத்திக் கொண்டுள்ளன. உண்மையில், நல்லெண்ணெய்க்கான அடக்கச் செலவு குறைவு, கடலை எண்ணெய்க்கான செலவு சற்றே அதிகம். ஆனால், சந்தையில் எப்போதுமே நல்லெண்ணெயின் விலை மிக அதிகமாகவும், கடலை எண்ணெயின் விலை மிகக் குறைவாகவும் இருக்கும். உண்மையான மூலப் பொருட்களான எள்ளையும் கடலையையும் பயன்படுத்தினால்தானே விலையும் அவற்றுக்குத் தக்க இருக்கும். இந்த நிறுவனங்கள் பயன்படுத்துபவை எல்லாமே இரசாயன நச்சுகளும், கலப்படக் குப்பைகளும்தான். இவை போக, விளம்பரங்களுக்காக இந்த நிறுவனங்கள் நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் வாரி இறைக்கும் பணத்தையும் உங்கள் சம்பாத்தியத்திலிருந்துதான் பிடுங்க வேண்டியுள்ளது. ஆகவே, உண்மையான நிலவரத்துக்கும் இவர்களது விலை நிலவரத்துக்கும் தொடர்பே இருப்பதில்லை.
சட்டப்படி நம்மால் இந்தக் கேள்விகளை எழுப்ப முடியாது. சட்டம் விலை நிர்ணயத்தை அப்படியெல்லாம் வரையறுப்பதில்லை. மேலும், நெருக்கிப் பிடித்துக் கேள்விகள் கேட்டால், ’எண்ணெயைச் சுத்திகரிப்பு’ செய்வதில் எங்களுக்குக் கூடுதல் செலவு ஆகிறது என அந்த நிறுவனங்கள் பதில் கூறும். எள்ளில் இருந்தும் கடலையில் இருந்தும் எடுக்கும் எண்ணெய்களை ஏன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்? அவை இரண்டுமே மனிதர்களின் உணவுப் பொருட்கள்தானே? கால காலமாக நம் முன்னோர் அவற்றை அப்படியேதானே உண்டு வந்திருக்கிறார்கள்? எனக் கேட்டால், ‘அவற்றை அப்படியே உட்கொண்டால் இதயம் பாதிக்கப்படும், சர்க்கரை நோய் வரும்’ என்று அச்சுறுத்தி விடுவார்கள்.
ஆக, ’உங்கள் உயிருக்கு ஆபத்து’ என்று அச்சுறுத்தித்தான் இங்கே எல்லாப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. உங்கள் சம்பாத்தியமும் உங்கள் உடல் நலமும் இந்த நிறுவனங்களால் அநியாயமாகக் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
உங்கள் சமையலறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களும் மோசமான முறைகளில் உங்களைச் சுரண்டிக் கொண்டுள்ளன. இதனால்தான், நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறீர்கள். இதனால்தான் நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உணவு என்பது இயற்கை அன்னையின் கொடை. உங்கள் வீட்டு அலமாரிகளில் இருப்பவை தொழிற்சாலைப் பிசாசுகளின் பலி பொருட்கள். ’மரபுக்குத் திரும்ப வேண்டும்’ என்று கூறுவதன் அவசியம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.
 — with Engals Raja and 20 others.

Comments

Popular posts from this blog

pls stop gm field trial in indian land and we dont want gm foods we are not rats pls save our agriculture from monsanto and big multinational companys

போராட்டம் ஒன்றே தீர்வு

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்